மகப்பேறு காலத்தில் மனைவியை கவனிக்க கணவருக்கு விடுமுறை வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் - நாளிதழ் செய்தி

naveen

Moderator


மகப்பேறு காலத்தில் மனைவியை கவனிக்க கணவருக்கு விடுமுறை வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் - நாளிதழ் செய்தி (Husband should be given leave to take care of wife during maternity, High Court - Daily News)...



மகப்பேறு காலத்தில் மனைவியை உடனிருந்து கவனிக்க கணவருக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.



தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன். இவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: என் மனைவி கர்ப்பமாக உள்ளார். பிரசவ காலத்தில் மனைவியுடன் இருப்பதற்காக எனக்கு மே 1 முதல் 90 நாட்கள் விடுமுறை கேட்டு உயர் அதிகாரிகளுக்கு விண்ணப்பித்தேன். எனக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பின்னர் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி எனக்கு வழங்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்டது.



இதை எதிர்த்து உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தேன். அதனை விசாரித்த உயர் நீதிமன்றம், என் விடுமுறை விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட்டது. இதையடுத்து மே 1 முதல் 30 நாள் எனக்கு விடுமுறை வழங்கப்பட்டது. மே 31-ல் மனைவிக்கு குழந்தை பிறந்தது. இதனால் என்னால் பணிக்கு திரும்ப முடியவில்லை. இது குறித்து காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு வாட்ஸ்அப் வழியாக தகவல் அனுப்பினேன். இதனை ஏற்க மறுத்து நடத்தை விதிகளை மீறியதாக எனக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை அனுப்பப்பட்டது. இதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.



இந்த மனுவை விசாரித்து நீதிபதி எல்.விக்டோரியாகவுரி பிறப்பித்த உத்தரவு: இந்தியாவில் மனைவியின் மகப்பேறு காலத்தில் மனைவியை உடனிருந்து கவனிக்க தந்தைக்கு விடுமுறை வழங்க வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக பேசப்படுகிறது. குழந்தை பிறக்கும்போது தந்தையும் உடனிருப்பது அவசியமானது. குழந்தை வளர்ப்பதில் தாய், தந்தை இருவருக்கும் முக்கிய பங்கு உண்டு.



பல்வேறு நாடுகளில் மகப்பேறு காலத்தில் தாயுடன் தந்தைக்கும் சேர்த்து விடுமுறை வழங்கப்படுகிறது. இந்தியாவில் மனைவியின் மகப்பேறு காலத்தில் தந்தைக்கு விடுமுறை அளிப்பதற்கான தனிச் சட்டம் இல்லை. இருப்பினும் மத்திய குடிமைப் பணிகள் (விடுமுறை) விதியில் தந்தையருக்கான விடுப்பு குறித்து கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் மகப்பேறு காலத்தில் மனைவியுடன் கணவர் இருப்பதற்கு தனிச்சட்டம் நிறைவேற்ற அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் மனுதாரர் பொறுப்புள்ள தந்தையாக செயல்பட்டுள்ளார். இதனால் அவருக்கு வழங்கப்பட்ட குற்றச்சாட்டு குறிப்பாணை ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.



இந்தியாவில் தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை, குழந்தை பெறும்போது தந்தையருக்கு விடுப்பு வழங்கப் படுவதில்லை. ஆனால், Central Civil Services (Leave) Rules, 1972-ல் மகப்பேறு காலத்தில் தந்தைக்கும் விடுப்பு வழங்குவது குறித்து கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு உட்பட இது எந்த மாநிலத்திலும் நடைமுறையில் இல்லை.



மகப்பேறு காலத்தில் மனைவியுடன் கணவர் இருப்பதற்கு தனி சட்டம் உருவாக்கப்படுவது அவசியமாக உள்ளது, இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் பொறுப்புள்ள தந்தையாகச் செயல் பட்டுள்ளார். அதனால் அவருக்கு விளக்கம் கேட்டு வழங்கப்பட்ட அழைப்பாணை ரத்து செய்யப்படுகிறது. மேலும், அவர் கடையம் காவல் நிலையத்தில் காவல் அதிகாரியாகப் பணியில் சேர உத்தரவிடப்படுகிறது’ எனத் தீர்ப்பளித்துள்ளார். மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock