பள்ளிக்கல்வி ஆணையர் பணியிடம் கொள்ளிக்கட்டையே!...

naveen

Moderator


ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பள்ளிக் கல்வித் துறை ஆணையர் மாற்றம் நடந்தேறியதில் மிக்க மகிழ்ச்சி! கர்நாடகாவில் ஆட்சி மாற்றமும் தமிழ்நாட்டில் ஆட்சியர்கள் மாற்றமும் ஒருசேர நடந்திருப்பது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சிறந்த முடிவு!

தமிழகக் கல்வி வரலாற்றில் கடந்த ஆட்சியில் தேசியக் கல்விக் கொள்கை அடிப்படையில் புதிதாக உருவாக்கப்பட்ட பள்ளிக் கல்வி ஆணையர் பணியிடத்தால் ஆசிரியர்கள் பட்ட துன்பங்களும் துயரங்களும் சொல்லவொணாதவை.

எந்நேரமும் ஒருவித பதட்ட நிலையில் படபடப்பு மேலோங்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆணை என எதேச்சாதிகாரப் போக்குடன் சாட்டைச் சுழற்றித் தொடர்ந்து கற்பித்தல் பணிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் புதிது புதிதாக தேவையே அற்ற செயலிகளை, இணைய தளப் பதிவுகளை, புள்ளிவிவர அறிக்கைகளை, கூடவே கூடுதலான பதிவேடுகளைப் பராமரிக்கச் சொல்லிக் கட்டாயம் வலியுறுத்தி வந்தது என்பது சகிப்பதற்கில்லை.

மறைமுகமாகவும் மிக நூதனமாகவும் சனாதனக் கூறுகளையும் கருத்தியல்களையும் வலிந்து புகுத்தி பட்டாம்பூச்சி முதுகில் பாறாங்கல் சுமையாகப் பாடப்புத்தகங்களைக் கனக்கச் செய்து மாணவர்களுடன் சேர்ந்து ஆசிரியர் பெருமக்களும் வகுப்பறைகளில் நாளும் புழுங்கிச் சாகும் நிலையில் சமச்சீர் கல்வியைக் குழிதோண்டிப் புதைத்துள்ளது வேதனைக்குரியது.

மண்டல அளவிலான ஆய்வுகள் என்று கூறி ஏதோ குற்றவாளிகளைக் கையும் களவுமாகப் பிடிப்பதுபோல படையெடுத்து வந்து தாம் மேற்கொள்ளும் பணியைச் செவ்வனே செய்து வருகிற இருபால் ஆசிரியப் பெருமக்களுக்குத் தொடர் தொல்லைகள் அளித்ததும் அதனூடாக நிகழும் ஆய்வுக்குப் பிந்தைய அறிவுறுத்தல் கூட்டங்களில் பலபேர் முன்னிலையில் பூதாகரப்படுத்தப்பட்ட குறைபாடுகள் மற்றும் விடுபாடுகள் ஆகியவை குறித்த கண்டிப்புகள் காரணமாக ஆசிரியர்கள் அடைந்த மன உளைச்சல்கள் ஏராளம்.

இணைய வேகம் மற்றும் பரவலான பயன்பாடு ஆகியவற்றில் மேம்படுத்தப்படாத கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையம் (EMIS) இணைய தளம் மற்றும் செயலிகளைக் கொண்டு ஆசிரியர்களை சோதனைக்கூட எலிகளாக இணைய இணைப்பு எட்டிப் பார்க்கும் மரங்கள் மற்றும் பள்ளிக் கட்டிடங்கள் உச்சியில் அலையவிட்டு அலைக்கழித்ததும் பள்ளி மற்றும் மாணவர்கள் பதிவுகள் குறித்து இரட்டைச் சவாரி மேற்கொள்ள மாவட்ட, வட்டார அலுவலர்கள் மூலமாக அறிவுறித்தியதும் அதன் வாயிலாகக் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளுக்கு ஊறு விளைவித்ததும் துன்பியல் நிகழ்வுகளாகும்.

உண்மையான கள நிலவரம் அறியாத அல்லது அறிய முற்படாதப் பள்ளிக்கல்வி ஆணையர் தம் மனம் போன போக்கில் ஆசிரியர்கள் குரலாக ஒலிக்கும் ஆசிரியர் இயக்க முன்னோடிகள் எளிதில் அணுக முடியாத, எந்த குரலுக்கும் செவிமடுக்காத முழு வல்லமை படைத்த நபராகத் தம்மை எண்ணிக்கொண்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தேவையற்ற ஆணைகளைப் பிறப்பிப்பதும் பின்னர் விபரீதம் உணர்ந்து பின்வாங்குவதும் கடந்த காலங்களில் மலிந்திருந்ததை மறக்கக்கூடாது.

இதுபோன்ற தன்னிச்சையான ஆணவப் போக்கால் ஆட்சியாளர்கள் மீதான இணக்கமும் ஆதரவும் ஆசிரியர்கள் மத்தியில் வெகுவாகக் குறைந்து ஆள்பவர்கள் மீது தீரா வெறுப்பையும் நீறுபூத்த நீங்கா சினத்தீயையும் மூட்டி விட்டது என்பது மிகையாகாது. தாம் அனுபவித்த இன்னல்களுக்கு எல்லாம் பதிலடியாக அவ்வப்போது ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் தம் ஒட்டுமொத்த கோபத்தைக் கொட்டிப் பலிவாங்கும் படலத்திற்கு பள்ளிக்கல்வி ஆணையர் முன்னுரை எழுதி விடுகிறார். ஆசிரியர்கள் அதற்கு முடிவுரை எழுதிவிடுகின்றனர். இதில் பலியாடுகளாக ஆட்சி புரிபவர்கள் ஆகி விடுகின்றனர்.

இத்தகைய நிலையில், ஆசிரியர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் ஆகியோருக்கு இணைப்புப் பாலமாக இருக்க வேண்டிய ஆணையர் பதவியானது இருதரப்பையும் தம் தொடர் ஆசிரியர் விரோத நடவடிக்கைகள் காரணமாக இணையாத கோடுகளாகப் பிரித்து வைத்து விடுகிறது. இவர்கள் செய்யும் தவறுகளுக்குக் கல்வித்துறையும் தமிழக அரசும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பல நேரங்களில் தலைகுனிந்து நிற்கும் சூழல் கடந்த காலங்களில் நிகழ்ந்ததை மறுக்க முடியாது.

ஆகவே, முன்பிருந்த பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்விக்கென தலா ஓர் இயக்குநர், அவர்களைக் கண்காணிக்கவும் நெறிப்படுத்தவும் ஆட்சியர் நிலையில் கல்வித்துறை செயலாளர் பதவி என்பவை போதுமானவை. இதில் பள்ளிக்கல்வி ஆணையர் பணியிடம் என்பது கூடுதல் மிக்க, வீண் செலவினம் மிக்க, எல்லோருக்கும் பெரிய தலைவலி தரத்தக்க, தேவையற்ற ஒன்றாகும். கடைசியாக ஒரேயொரு கேள்வி. தம் தலையைச் சொரிய யாராவது மறுபடியும் கொள்ளிக்கட்டையை எடுப்பார்களா என்ன?

எழுத்தாளர் மணி கணேசன்
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock