பஞ்சு மிட்டாய்க்கு தடை: தமிழக அரசு உத்தரவு

naveen

Moderator



பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளளது.



இதுதொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில், “பஞ்சு மிட்டாய் மற்றும் நிறமூட்டப்பட்ட மிட்டாய் வகைகளை அரசு உணவு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்ததில் ரொடமைன் பி (Rhodamine-B) எனப்படும் செயற்கை நிறமூட்டி வேதிப்பொருள் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 பிரிவின்படி, தரம் குறைவான மற்றும் பாதுகாப்பற்ற உணவு என உறுதி செய்யப்பட்டுள்ளது.



எனவே, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 பிரிவின்படி, ரொடமைன் பி எனப்படும் செயற்கை நிறமூட்டியைக் கொண்டு உணவு பொருட்கள் தயாரித்தல், பொட்டலமிடுதல், இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகள் ஆகியவற்றில் பரிமாறுதல் ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும் இதுகுறித்து ஆய்வு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



முன்னதாக, சென்னையில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் மெரினா கடற்கரையில் கடந்த பிப்.8-ம் தேதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது வண்ணங்கள் அதிகம் சேர்க்கப்பட்ட ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 1,000-க்கும் மேற்பட்ட பஞ்சுமிட்டாய் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.



இதை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பி இருந்தனர். ஆய்வு முடிவில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் ரோடமைன் பி (Rhodamine B) என்ற நச்சுப்பொருள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.



இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் கூறியதாவது: ரோடமைன் பி நச்சுப்பொருள் ஜவுளி உற்பத்தி துறையில் சாயத் தொழிலுக்கு பயன்படுத்தப்படுகிறது. குறைந்த செலவில் மக்கள் மனம் கவரும் வண்ணத்தை கொடுப்பதால் பஞ்சு மிட்டாயில் பயன்படுத்தப்படுகிறது.



இயற்கை உணவுகளில் உள்ள வண்ணங்கள் நமது உடலில் இருந்து 24 மணி நேரத்தில் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். ஆனால் இதுபோன்ற நச்சு வண்ணங்கள் வெளியேற 45 நாட்கள் ஆகும்.



இது உடலில் தங்கி சிறுநீரகம், கல்லீரல், நரம்பு மண்டலம், மூளை போன்றவற்றை பாதிக்கும். இவை உடல் செல்களில் உள்ள மரபணுக்களை சிதைக்கும் திறன் உடையவை. அதனால் இவற்றை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock