தேர்தல் பணி அனுபவம் - கவிதையாய்...

naveen

Moderator



ஒதுக்கப்பட் ஊருக்குள் பேருந்து இறக்கிவிட்டதும்



எங்களுக்குள்

ஏறிக் கொண்டது

தேர்தல் பணி..



Zonal offficer

கொடுத்துப் போன

கோணிமூட்டையை

கொட்டியதும்

கொத்து கொத்தாய்

வந்து விழுந்தன

ஃபாரங்கள்..



EVM எந்திரங்களை

பிறந்த குழந்தை

போல பாதுகாத்தோம்..



சின்ன

வகுப்பறை

ஒரே ட்யூப்லைட்..

ஓரமாய் ஓடும்

மின்விசிறி..

இப்படி கொடுத்ததற்குள்

வாழ கற்றுக் கொடுத்தது

தேர்தல் பணி..



குழாய்

இருந்தது

தண்ணீர் இல்லை..

பாத்ரூம்

கதவு உடைந்திருந்தது..

சில இடங்களில்

பாத்ரூமே

இல்லை என்று கேள்விபட்ட போது மனம் தானாக

ஆறுதலடைந்தது..



புரண்டு புரண்டு படுத்தும்

இமைகளில்

தூக்கம்

அமரவில்லை..



பக்கத்தில் P3

படுத்ததும்

தூக்கம் அவரை வாரி

அணைத்துக் கொண்டது..



P1 'குபீர் குபீர்'

என்று

எழுந்து மீண்டும்

படுத்துக் கொண்டார்..



வந்த

தண்ணீரை

நெய் போல

ஊற்றி குளித்து

ஐந்து மணிக்கே

தயாரானோம்..



ஆறுமணிக்கு

வந்த

ஏஜெண்டுகள்..

அவர்கள் கூட

வந்த

குளிக்காத

ஆட்கள் என்று

Mockpoll

தொடங்கியது..



ஆயிரம்

முறை வீடியோ

பார்த்தாலும்

அங்கு ஒருமுறை

சீல் வைப்பதில்

தடுமாறி

சரிசெய்து தொடங்கியது உண்மை

வாக்குப்பதிவு..



ஏழு மணிக்கு

துவங்கிய

வரிசை

ரயில் பெட்டி

போல நீண்டது..



அடிக்கடி

Total வுடன்

17A

ஒப்பிட்டு

ஒரே எண்ணிக்கை வர

குலதெய்வத்தை

கும்பிட்டேன்..



இட்லி

வந்து

வயிற்றில்

ஓட்டுப் போட மணி

பத்து ஆனது..



நடுவே ஒரு

தேநீரில்

தலைவலிக்கு

ஒத்தடம் கொடுத்தேன்..



மதிய உணவை

மறக்கும் அளவுக்கு

வாக்குப்பதிவு கூட்டம்..



கையுறை

சானிடைசர்

முகக்கவசம்

எல்லாம் மறைமுக

வேட்பாளாரான

கொரோனாவின்

சின்னங்கள்..



ஆறு மணிக்கு

மேல்

அடங்கத் தொடங்கியது

வெளிச்சமும்

கூட்டமும்..



ஒரு வழியாக

ஏழு மணிக்கு

Close அழுத்தியதும்

நிம்மதி Open ஆனது..



சீல் வைத்து

முடித்ததும்

ஓரிருவரை தவிர

காற்றாய்

பறந்தனர் ஏஜென்டுகள்..



Po டைரி

17C

Declaration form

எல்லாம்

முடித்து நிமிர்ந்த போது

முட்கள் ஒன்பதை

முத்தமிட்டிருந்தது..



P1 P2 P3

'ஒருநாள் குடும்பம்'

போல

பழகியதால்

எங்கள் ஒற்றுமையின்

இசையில்

சின்ன சின்ன

சலசலப்புகள்

காணாமல் போனது..



இரவு உணவுக்கு

பதில் தந்த

வாழைப்பழதத்தில்

பசி வழுக்கி

விழுந்தது

வயிற்றுக்குள்..



பத்து மணிக்கு

மேல்

பறந்து வந்த

Zonal

மொத்தத்தையும்

கொத்திக் கொண்டு

மீண்டும் பறந்தார்..



12 மணிக்கு

மேல்

துரத்திய நாய்களை தாண்டி வீடுவந்த போது

நாட்டுப்பணி ஆற்றிய

ஒரு ராணுவ வீரனின்

கம்பீரம் எனக்குள்..
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock