தேர்தல் பணிக்கு வரும் பெண் ஊழியர்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப சிறப்பு வாகன வசதி செய்து தருமா தேர்தல் ஆணையம்?

naveen

Moderator
தேர்தல் பணிக்கு வரும் பெண் ஊழியர்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப சிறப்பு வாகன வசதி செய்து தருமா?

நாடு முழுவதும் நடைபெற உள்ள 18 ஆவது மக்களவைக்கான தேர்தலில் தமிழகத்தில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களித்திட வசதியாக 10,214 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தேர்தல் நடைபெறும் நாளுக்கு முன்னதாக ஏப்.17,18 இல் சென்னையிலிருந்து 2,970 சிறப்புப் பேருந்துகள் என இந்த இரண்டு நாட்களுக்கு மொத்தம் 7,154 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. இவையனைத்தும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

இச்சூழலில், இரண்டு கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகளை நிறைவு செய்துள்ள வாக்குச்சாவடி மைய தேர்தல் தலைமை வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் ஏனைய வாக்குப்பதிவு அலுவலர்கள் எதிர்வரும் நாள்களில் மேலும் ஒரு பயிற்சி வகுப்பை நிறைவு செய்து அதன்பின் ஏப் 18 அன்று குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுத் தெரிவிக்கப்படும் வாக்குச்சாவடி மையத்திற்கு தம் குழுவினருடன் பயணிக்க இருக்கின்றனர்.

இப்பணியில் அதிகம் ஈடுபடுத்தப்படும் ஊழியர்களாக மாநிலம் முழுவதும் உள்ள பலவகைப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளனர். தொடக்கக்கல்வி முதற்கொண்டு கல்லூரிக்கல்வி முடிய உள்ள இருபால் ஆசிரியர்கள் தேர்தல் பணியிலிருந்து விலக்குப் பெற்றவர்கள் தவிர ஏனையோர் முழுவதும் இப்பணியில் பயன்படுத்தப்பட இருக்கின்றனர். இவர்களுள் பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகம். தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத பெரிய அதிசயம். பல்வேறு தரப்பினரின் நீண்ட நெடிய கோரிக்கையை முன்னிட்டு இந்த முறைதான் பெரும்பாலான பெண்களுக்கு அவரவர் சொந்த தொகுதியிலேயே தேர்தல் பணி மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது வரவேற்கத்தக்கது.

ஏனெனில், தேவையற்ற பயண அலைச்சலும் அதனால் உண்டாகும் மன உளைச்சலும் பெண்களின் உடல்நலத்தை முற்றிலும் பாதிப்பு அடையச் செய்து விடுவதால் தேர்தல் பணி என்றாலே வெறுத்து ஓடும் அவலம் இன்றும் தொடர்கிறது.

பல்வேறு தரப்பினரின் தொடர் அழுத்தத்தின் காரணமாக தேர்தல் ஆணையம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளைத் தொடர்ந்து செய்தபடி உள்ளது. முதலாவது, வாக்குச்சாவடி மையங்களில் அலுவலர்களுக்குத் தேவையான இருக்கை மற்றும் காற்றோட்ட வசதிகள், கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதிகள் போன்றவை குறித்து சிறப்புக் கவனம் செலுத்தி ஏற்படுத்தித் தந்துள்ளது முக்கியமானது. இதில் பெண்களுக்கு மிக்க மகிழ்ச்சி.

அதுபோல், வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கான பயிற்சி திட்டமிடல் மற்றும் வழங்குதல், சிற்றுண்டி மற்றும் உணவு ஏற்பாடுகள், பெண்களுக்கு சொந்த தொகுதியும் ஆண்களுக்கு அதிகபட்சம் 35 கி.மீ. தொலைவில் பயிற்சி வகுப்புகள் நடத்துதல் முதலான விரிவான ஏற்பாடுகள் அனைத்தும் வழக்கத்திற்கு மாறாக இந்த புதிய நடைமுறை பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில், இந்த ஏற்பாடுகள் இன்னும் கொஞ்சம் விரிவான முறையில் அமைதல் இன்றியமையாதது. குறிப்பாக, பெண்கள் இப்போதும் அச்சத்தில் இருப்பது தேர்தலுக்கான முந்தைய நாள் பிற்பகல் பயணத்தைக் காட்டிலும் வாக்குப்பதிவு முடிந்ததும் வீடு திரும்ப ஆகும் நள்ளிரவைத் தாண்டிய பயணத்தை நினைத்துத் தான்! அந்த நேரத்தில் முறையாகப் போக்குவரத்து வசதி இல்லாமை, சக ஊழியர்களால் கைவிடப்பட்ட தனிமை, வாக்குப்பதிவு இயந்திரங்களை முறைப்படிப் பெற்றுக் கொண்டதும் தம் கடமை முடிந்ததாகக் கைவிட்டுச் செல்வதும், பசியில் வாடுவதும், நாதியற்று நிற்பதும் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

இந்த நிகழ்வுகளின் போது அதிகம் பாதிக்கப்படுபவர்களாக, கணவனால் கைவிடப்பட்டோர், கைம்பெண்கள், முதிர் கன்னிகள், கன்னியாஸ்திரிகள், கணவர் எதிர்திசையில் உள்ள வேறு தொகுதியில் தொலைவில் பணிபுரியும் சூழலில் பாதிக்கப்படும் மனைவிகள், விடுதிகளில் தங்கி பணிபுரியும் தொலைதூர மாவட்டத்தைச் சார்ந்த பணிமகளிர், திடீர் உடல்நலக் கோளாறு மற்றும் மாதவிடாய் காரணமாகப் பாதிக்கப்படும் பெண்கள் முதலானோர் இருக்கின்றனர்.

தேர்தலை மட்டுமல்ல அதற்கு உறுதுணையாக இருக்கும் அலுவலர்களைப் பாதுகாப்பான முறையில் வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் ஆணையத்திற்கு உள்ளது. கருவேப்பிலை மாதிரி முடிந்தவரை இவர்களைப் பயன்படுத்திக் கொண்டு பின் கண்டும் காணாமல் போவதென்பது சரியான நடைமுறை அல்ல. நம்பி வந்தவர்களை நட்டாற்றில் விடுவது ஏற்புடையதாகாது.

இது குறித்தும் ஆணையம் சற்று சிந்திக்க வேண்டும். போக்குவரத்து வசதியற்ற நபர்களை மட்டும் அழைத்துக் கொண்டு வந்து இரவு நேரப் பேருந்து வழித்தடம் உள்ள பகுதிகள் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்றவற்றில் இறக்கி விடுதல் அவர்களுக்குப் பெரும் புண்ணியமாக இருக்கும். மேலும், சிறப்புப் பேருந்துகள் வசதி சேவைகள் தொடர் போக்குவரத்து வசதியற்ற இரு நகரங்களுக்கு இடையே நடு இரவிலும் தொடர்ந்திட தக்க நடவடிக்கை எடுக்கப்படுதல் முக்கியம். ஆணையம் ஆவனச் செய்யுமா?

எழுத்தாளர் மணி கணேசன்
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock