குரல் முக்கியமா... குரல்வளை முக்கியமா...தெரிந்து கொள்வோம்...

naveen

Moderator


குரல் முக்கியமா... குரல்வளை முக்கியமா...தெரிந்து கொள்வோம்...



பிறந்த கணத்தில் அழுகையில் ஆரம்பித்து, 'அம்மா’ என்ற வார்த்தையில் தொடங்கி, இறுதி மூச்சின் முனகல் வரை எழுப்பும் குரல்வளை, மனித உடலின் ஒரு மகத்துவ அமைப்பு.



√ நுரையீரலில் இருந்து மூச்சுக் காற்றை எழுப்பி, குரல் நாண்கள் ஒன்றோடு ஒன்று இணைவதால் ஏற்படும் அதிர்வுதான் குரல்.



√ நுரையீரலில் இருந்து வெளிப்படும் காற்று, கழுத்தில் நிலை கொண்டு பல், உதடு, நாக்கு, மூக்கு, அன்னம் போன்றவற்றில் மூளையின் திட்டமிட்ட உத்தரவின்படி சீரான அசைவைப் பெறும் போது, அது பாடலாக உற்சாகமாக வெளிப்படுகிறது.



√ 12-13 வயது வரைக்கும் மட்டுமே ஆணுக்கும் பெண்ணுக்கும் குரல் கிட்டத்தட்ட ஒரேமாதிரி இருக்கும்.



√ 13 வயதைத் தாண்டும்போது, ஆண்களுக்கு ஆண் ஹார்மோன் ஆதிக்கம் தொடங்கி, குட்டி மீசை துளிர்க்கும்போது, குரல் உடையத் தொடங்கி வலுப்பெறும். அப்போது தான் ஆணின் குரல் நாண்கள் நீளம் அடைந்து, விரிவடைந்து, ஆடம்ஸ் ஆப்பிள் தொண்டையில் தெரியும். பெண்களுக்கு, இந்தக் குரல் நாண்கள் வளரவும் விரியவும் முயற்சிப்பது இல்லை.



√ ஆண், 17-18 வயதை எட்டிய பிறகும் கொஞ்சம் பெண்மை கலந்த குரலில் பேசினால், அது `ப்யூபர்போனியா' (Puberphonia) என்னும் கோளாறு என்கிறது நவீன மருத்துவம். குரல் நாண்களை இழுக்கும் அறுவைசிகிச்சையுடன், தொடர்ந்து மூன்று மாதங்கள் ஸ்பீச் தெரப்பியும் எடுத்துக் கொண்டால் ஆண் குரல் வந்துவிடும்.



குரல், குரல்வளை பாதுகாக்க வழிமுறைகள்...



* குரல்வளை, வெளிக்காற்றுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதால், தொற்றும் நோய் எளிதாகக் குரலைச் சிதைத்துவிடுகிறது. அதோடு, தொண்டைத் தொற்றுகள் குரல்வளையைப் பாதித்து, அதன் உட்சதையை வீங்க வைத்துவிடும். உணவை விழுங்கும் போது, வலி உண்டாகும். சத்தமாகப் பேசும்போது வலி கூடும்.



√ வெந்நீரில் உப்புப்போட்டு, காலை, மாலை வாய் கொப்பளித்து அல்லது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்த்த திரிபலா பொடி போட்ட வெந்நீரில் வாய் கொப்பளித்தால் இதற்குப் பரிகாரம் கிடைக்கும். கூடவே, பாலில் மஞ்சள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு கலந்து சூடாகக் குடித்தால், குரல்வளை அழற்சி மறையும்.



* சிறுவயதிலேயே தொண்டையில் குடியேறும் கிருமி ஸ்ட்ரெப்டோகாக்கஸ் (Streptococcus). நம் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறையும் போது, அந்தக் கிருமிக்கூட்டம் மெதுவாக டான்சில் வீக்கம் (Tonsillitis), அடினாய்டு வீக்கம் (Adenoiditis) என உண்டாக்கி, பின்னர் மூட்டுவலியை உண்டாக்கி, மெள்ள மெள்ள இரத்தத்தில் கலந்து, இதயத்தின் வால்வுகளில் குடியேறி அதன் செயல்திறனை அழிப்பது எனப் பல பிரச்னைகளுக்குக் காரணம் ஆகின்றன. மொத்தத்தில் இந்த நோய் தொடங்குவது குரல்வளையில்தான்.



√ நள்ளிரவில் ஐஸ்க்ரீம், தொண்டை, கன்னக் கதுப்புகளில் ஒட்டிக்கொள்ளூம் சாக்லேட் போன்றவற்றை மென்று திரியும் குழந்தைகளுக்குத்தான் இந்தப் பிரச்னை பெரிதும் வருகின்றன.



-> ஆரம்பத்திலேயே இந்தக் கிருமியின் தாக்கத்தைக் குறைக்க, கற்பூரவல்லிச் சாறும் தேனும் கலந்து சுரசம் செய்து கொடுக்கலாம்.



-> மிளகைப் பொடித்து, தேனில் குழைத்து, மிதமான வெந்நீரில் கலந்து கொடுக்கலாம்.



-> சித்த மருத்துவத்தில் இதற்குத் தீர்வாக கடற்சங்கை பஸ்பம் ஆக்கி, மருந்தாகக் கொடுப்பார்கள். இந்த மருந்தை 3-4 சிட்டிகை நெய்யில் கலந்து கொடுக்க, ஆரம்பகட்ட டான்சில் வீக்கத்தை அடியோடு விரட்டலாம். குழந்தைக்குக் கூடுதல் தேவையான கால்சியம் சத்தையும் சேர்த்துத் தந்து, டான்சில் வீக்கத்தையும் வீழ்த்தும் இந்தச் சங்கு பஸ்பம், சிறந்த குரல்வளை காப்பான்.



டான்சில் வீக்கமா



வெள்ளைப் பூண்டை அரைத்து, ஒரு துணியில் தடவி, லேசாகச் சூடுபடுத்தி, அந்தச் சூட்டுடன் துணியைப் பிழிந்து, பூண்டுச்சாறு எடுக்க வேண்டும். இதோடு, சுத்தமான தேனை பூண்டுச் சாற்றுடன் சம அளவு கலந்து வைத்துக்கொள்ளவும். சுத்தமான பஞ்சில் இந்தப் பூண்டுத் தேனைத் தொட்டு டான்சில் வீக்கத்தில் மென்மையாகத் தடவிவர, வீக்கம் மெள்ள மெள்ளக் கரையும். குழந்தைகளுக்கு விஷயத்தைப் புரியவைத்து மெதுவாகத் தடவ வேண்டும். இல்லையென்றால், அந்தச் சாற்றை மூன்று சொட்டுகள் விழுங்கச் செய்தால்கூடப் போதும்.

* தொடர் அஜீரணம், இரைப்பையின் அமிலத்தை எதுக்களித்து மேலே அனுப்பும் நிலையிலோ அல்லது உணவுக்குழாயும் இரைப்பையும் சந்திக்கும் இடத்தின் வால்வு சீராக இல்லாமல் போய் அதனால் அமிலத் தாக்குதல் உண்டாவதாலோ, குரல் கெட்டுப்போகும் வாய்ப்புகள் அதிகம். இந்த இரண்டுக்கும் எளிய மருந்து அதிமதுரம். இது, வயிற்றுப்புண்ணை ஆற்றும், வயிற்றில் அதிகப்படியான அமிலச் சுரப்பையும் குறைக்கக் கூடியது. அந்த அமிலம் உண்டாக்கும் வறட்டு இருமலுக்கும், அதிமதுரம் மிகச் சிறந்த கை மருந்து.



√ அரை டீஸ்பூன் அளவு அதிமதுரத்தை தேனில் குழைத்துச் சாப்பிடலாம் அல்லது அரை டம்ளர் பாலில் கலந்து காய்ச்சியும் குடிக்கலாம்.



* குரலை முறையற்றுப் பயன்படுத்தினாலும், அளவுக்கு அதிகமாகச் சத்தம் போட்டாலும் குரல் நாண்களுக்கு ஆபத்து. இப்படிச் செய்வது, குரல் நாண்களில் சிறுசிறு கட்டிகளை உண்டாக்கி விடும். உரத்தக் குரலில் பேசும் ஆசிரியர்கள், பாடகர், பேச்சாளர்களுக்கு அந்தக் கட்டிகள் வர வாய்ப்புகள் அதிகம். இவர்களுக்கு முதல் மருந்து மௌனம். மாதத்தில் இரண்டு நாட்கள் மௌன விரதம் இருந்தாலே அந்தக் கட்டிகள் காணாமல் போய்விடும். சரியாகாதபட்சத்தில்,



√ ஆடாதொடை இலையும் இரண்டு மிளகும் சேர்த்து கஷாயம் செய்து மூன்று நாட்கள், இரண்டு வேளை சாப்பிட்டால், குரல் நாண்களில் வீக்கம் குறையும்.



* 95 சதவிகிதக் குரல்வளைப் புற்று, புகைப் பழக்கத்தால் மட்டுமே வருகிறது. எனவே, இந்தப் பழக்கத்தைக் கைவிடுவது நல்லது.



குரல் வளத்தைப் பாதுகாக்க



எப்போதும் தொண்டையை ஈரமாக வைத்திருங்கள்; ஐஸ்க்ரீமைத் தவிர்ப்பது நலம்; பிராணாயாமப் பயிற்சி மிக அவசியம்; அதிகமாக இனிப்பு, காரம் எடுத்துக்கொள்ள வேண்டாம்; பனங்கற்கண்டு, மிளகு, பால் கூட்டணி... குளிர்காலத்திலும் குரலைப் பாதுகாக்கும்.



இயற்கை நமக்கு அளித்த மிக அற்புதமான குரலை, சேதாரம் இல்லாமல் பாதுகாக்க வேண்டியது நம் கடமைதானே!
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock