கிண்டியில் வரும் 9-ம் தேதி நடைபெற உள்ள காளான் வளர்ப்பு குறித்த பயிற்சி வகுப்பில் ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்க தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து பயிற்சி மையத்தின் தலைவர் ஏ.டி.அசோக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல், பயிற்சி மையத்தில் ஜன.9-ம் தேதி காளான் வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில், காளான் குடில் அமைத்தல், காளான் வித்து மற்றும் படுக்கை தயாரித்தல், தொற்று நீக்கம் செய்தல், காளான் அறுவடை மற்றும் உற்பத்தி செய்வதற்கான வரவு செலவீனங்கள் ஆகியவை குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் விளக்கமளிக்கவுள்ளனர்.
இதேபோல் ஜன.10-ம் தேதி நடைபெறும் பயிற்சி வகுப்பில் முட்டை மற்றும் முட்டையில்லாத பிரவுனிகள், மெல்லும் பிரவுனிகள், வால்நட், சாக்லெட், வேர்க்கடலை, நியூடெல்லா, தேங்காய், கேரமல், ராஸ்பெர்ரி போன்ற பல்வேறு வகையான பிரவுனிகள் செய்வதற்கு கற்றுத்தரப்படும்.
தொழில் முனைவோர், விவசாயிகள், மகளிர், இளைஞர்கள், சுய உதவிக் குழுவினர் என அனைத்து தரப்பினரும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பயிற்சியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் 044-29530048 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.