கல்வி வளாங்களுக்குள் மாணவர்கள் தவிர வேறு யாரையும் முன்அனுமதி இல்லாமல் உள்ளே அனுமதிக்கக் கூடாது என்று உயர்கல்வித்துறை செயலர் கே.கோபால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவி பாலியல் கொடுமைக்கு ஆளான சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வளாக பாதுகாப்பு, மா்ணவிகளுக்கான பாதுகாப்பு மேற்கொள்வது தொடர்பாக உயர்கல்வித்துறை செயலர் கே.கோபால் தலைமையில் கடந்த வாரம் காணொலி காட்சி வாயிலாக ஆய்வுக்கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் தொழில்நுட்பக்கல்வி ஆணையர் டி.ஆபிரகாம், கல்லூரி கல்வி ஆணையர் இ.சுந்தரவல்லி, இணை இயக்குநர்கள், பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள், மாணவிகள் பாதுகாப்பு குழுவினர், பாலியல் வன்முறை தடுப்பு குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது கல்லூரி கல்வி ஆணையர், தொழில்நுட்பக்கல்வி ஆணையர் மற்றும் பல்கலைக்கழக பதிவாளர்களுக்கு உயர்கல்வித்துறை செயலர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். அதன் விவரம் வருமாறு:
அனைத்து பல்கலைக்கழகங்களிலும், அவற்றின் இணைப்பு அங்கீகாரத்துக்கு உட்பட்ட கல்லூரிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியில் வளாக பாதுகாப்பும், மாணவிகளுக்கான பாதுகாப்பும் மிக மிக முக்கியம். மாணவிகளின் குறைகளை தீர்ப்பதற்கான வசதிகள் செய்யப்பட வேண்டும்.
தற்போதைய சூழலில் கல்வி வளாகங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டியது அவசர அவசிய தேவை ஆகும். அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை தொடர்ந்து அனைத்து கல்வி நிறுவனங்களும் பாதுகாப்பு விஷத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியமாக இருந்தால் அதை எந்த வகையிலும் சகித்துக்கொள்ள முடியாது. வெளிநபர்களோ உள்ளே இருப்பவர்களோ ஏதேனும் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டால் அவர்களை ஒருபோதும் உள்ளே அனுமதிக்கக் கூடாது. பல்கலைக்கழக நிர்வாகங்கள் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் தகவல் தொழில்நுட்ப வசதிகளை பலப்படுத்தி வளாக நிகழ்வுகளின் பதிவுகளை எப்போது வேண்டுமானாலும் ஆய்வுசெய்யக்கூடிய நிலை உருவாக்கப்படவேண்டும்.
அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பாலியல் வன்கொடுமை தடுப்புக்குழு முழு அளவில் செயல்படுவது உறுதிசெய்யப்பட வேண்டும். மாணவிகள் ஏதேனும் புகார்கள் தெரிவித்தால் உடனடியாக அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேநேரம், பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் மாணவர்கள் மீது தேவையில்லாத கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது. மாணவர்கள் தெரிவிக்கும் கருத்துகளையும் யோசனைகளையும் கருத்தில்கொள்ள வேண்டும்.
கல்வி வளாகங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக அமல்படுத்தப்படுகின்றனவா என்பது உறுதிசெய்யப்பட வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கை விஷயத்தில் பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் 3-வது நபர் தணிக்கையை மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பு குறைபாடுகளுக்கு எந்தவிதமான சாக்குபோக்கும் சொல்லக்கூடாது.
கல்வி வளாகங்களுக்கு தினமும் வருகைதரும் வெளிநபர்களின் விவரம் பதிவுசெய்யப்பட வேண்டும். கல்வி வளாகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நுழைவு வாயில்கள் இருந்தால் முடிந்தவரை அவற்றின் எண்ணிக்கையை குறைத்துக்கொள்ள வேண்டும். அடையாள அட்டையை கட்டாயமாக்க வேண்டும். முக்கியமான நிகழ்வுகளை உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும்.
மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் தவிர சம்பந்தப்பட்ட துறையின் முன்அனுமதி இன்றி உள்ளே அனுமதிக்கப்படக் கூடாது. முன்பின் தெரியாத நபர்களை அடையாளம் கண்டுகொண்டாலே அனைத்து பிரச்சினைகளையும் முன்கூட்டியே தவிர்க்க முடியும். கல்வி வளாகத்துக்குள் வரும் பார்வையாளர்கள், வாகனங்களின் விவரம் தினசரி பதிவுசெய்யப்பட வேண்டும். மாணவிகளின் பாதுகாப்புக்கான 'காவலன்' செயலியை பதிவுசெய்யுமாறு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். மேற்கண்ட பல்வேறு உத்தரவுகளை உயர்கல்வித்துறை செயலர் பிறப்பித்துள்ளார்.