இளநிலை உணவக மேலாண்மை படிப்புக்கான ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு ஏப்ரல் 27-ம் தேதி நடைபெறும் என்று என்டிஏ அறிவித்துள்ளது.
தேசிய உணவக மேலாண்மை மற்றும் உணவு தொழில்நுட்பக் குழுமத்தின் கீழ் (என்சிஎச்எம்சிடி) இயங்கும் 78 கல்வி மையங்களில் கற்று தரப்படும் பிஎஸ்சி விருந்தோம்பல் மற்றும் உணவக நிர்வாகம் படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (என்சிஎச்எம் ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வியாண்டுக்கான என்சிஎச்எம் ஜேஇஇ நுழைவுத்தேர்வு கணினி வழியில் ஏப்ரல் 27-ம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ள மாணவர்கள் /exams.nta.ac.in/NCHM/ எனும் இணையதளம் வழியாக பிப்ரவரி 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள பிப்ரவரி 17 முதல் 20-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படும். இதுசார்ந்த கூடுதல் தகவல்களை என்ற என்டிஏ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 011-40759000/69227700 என்ற தொலைபேசி மூலமாக அல்லது nchm@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்பு கொண்டு உரிய விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.