இடைநின்ற மாணவர்களுக்கு கைகொடுக்கும் ‘ஆபரேஷன் ரீபூட்’ - செயல்படுவது எப்படி?

naveen

Moderator



அனைத்து செல்வங்களையும் விட மேன்மையானது கல்வி. ஏனைய செல்வங்கள் எப்போது வேண்டுமானாலும் நம்மை விட்டு போகலாம். ஆனால், கல்விச் செல்வம் அழிவில்லாத செல்வமாக இருக்கிறது. கல்வி கற்பதற்கு வயது தடையில்லை. ஆனால், பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டிய வயதில் பல்வேறு காரணங்களால் சிலர் அதை தவறவிடுகின்றனர்.



குறிப்பாக, 6 வயது முதல் 14 வயது வரையிலான ஆண், பெண் குழந்தைகள் கல்வி பெறுவது அடிப்படை உரிமையாகும். குடும்ப சூழல், வறுமை, கண்காணிப்பு இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் சிறார்களில் குறிப்பிட்ட சதவீதம் பேர் உரிய வயதில் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதாகவும், பள்ளியில் இருந்து இடைநின்று விடுவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.



இடைநின்றவர்களில் குறிப்பிட்ட சதவீதம் பேர் தவறான நபர்களுடன் நட்பு ஏற்பட்டு குற்றச் செயல்களில் ஈடுபடும் அளவுக்கு வாழ்க்கையில் திசைமாறிச் சென்று விடுகின்றனர். இவ்வாறு சிறார் குற்றவாளிகள் உருவாவதைத் தடுக்கவும், இடைநின்ற மாணவர்களுக்கு மீண்டும் கல்வியறிவை புகுத்துவதற்காகவும் கோவை மாநகர காவல்துறையினர் சார்பில், இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் பணியை செய்து வருகின்றனர்.



இது தொடர்பாக கோவை மாநகர காவல் அதிகாரிகள் கூறும்போது, ‘‘காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், ‘ஆபரேஷன் ரீ பூட்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளில் படித்து இடைநின்ற மாணவ, மாணவிகளை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது இத்திட்டமாகும்.



‘போலீஸ் அக்கா’ திட்டத்தில் உள்ள காவலர்கள், பெண்கள், சிறார்களுக்கான உதவி மைய காவலர்கள், குழந்தைகள் நலப்பிரிவு காவலர்கள் ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, தங்கள் காவல் எல்லைக்கு உட்பட்ட பள்ளிகளுக்குச் சென்று தலைமை ஆசிரியர்களை சந்தித்து இடைநின்ற மாணவ, மாணவிகளின் விவரங்களை பெறுவர்.



பின்னர், அந்த மாணவ, மாணவிகளின் பெற்றோரை சந்தித்து, எந்த காரணத்தால் பள்ளிப் படிப்பை கைவிட்டு அவர்கள் விலக வேண்டிய சூழல் வந்தது என விசாரிப்பர். தொடர்ந்து, கல்வி கற்பதால் கிடைக்கும் பலன்கள், கல்வியின் முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைப்பர். அதனடிப்படையில் இடைநின்ற மாணவ, மாணவிகள் பலர் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்’’ என்றனர்.



மேலும் அவர்கள் கூறும்போது,‘‘கோவையில் உள்ள தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள் என 286 பள்ளிகளில்மொத்தம் 894 பேர் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி இடைநின்றது தெரியவந்தது. இவர்களில் 226 சிறார்களை நேரடியாகச் சந்தித்து கலந்துரையாடினோம். அதனடிப்படையில், நடப்புக் கல்வியாண்டில் 83 மாணவிகள், 90 மாணவர்கள் என 173 பேர் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



இவ்வாறு சேர்க்கப்பட்டவர்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளும் உள்ளனர். இன்னும் மீதமுள்ள 30-க்கும் மேற்பட்டோரிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். இவ்வாறு சேர்க்கப்பட்டவர்கள் மீண்டும் இடைநின்று விடக்கூடாது என்பதற்காக கண்காணித்து வருகிறோம்’’என்றனர்.



காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் கூறும்போது,‘‘சிறார்களுக்கு கல்வி அவசியமாகும். பொதுவாக தவறு செய்யும் சிறார்களின் பின்புலத்தை பார்க்கும்போது, பெற்றோர் கண்காணிப்பு இல்லாதது, பள்ளிகளில் இருந்து இடைநின்றது போன்ற காரணங்கள் தெரியவந்தது. பெற்றோர் இல்லாத சிறார்கள், மாற்றுத்திறனாளி சிறார்கள் பட்டியல் காவல்துறையிடம் உள்ளது.



பள்ளியில் சேர்ந்து படிக்கும் போது, தவறான எண்ணங்களைக் கொண்ட நபர்களுடன் சேருவது தவிர்க்கப்படும். காவலர்கள் மூலம் இப்பணி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இடைநின்ற அனைவரையும் கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock