ஆதித்யா எல்-1 வெற்றிப் பயணம்

naveen

Moderator



இந்திய விண்வெளி ஆய்வுத் துறையின் வரலாற்றுச் சாதனை நிகழ்வாக சூரியனின் புறவெளியை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலம், பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட்மூலம் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக சனிக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது.



திட்டமிடப்பட்ட புவி தாழ்வட்டப் பாதையில் விண்கலம் விடுவிக்கப்பட்டதை அடுத்து திட்டம் முதல்கட்ட வெற்றியை எட்டியதாக இஸ்ரோ அறிவித்தது. இதையடுத்து விஞ்ஞானிகள் பரஸ்பரம் மகிழ்ச்சியைப் பகிா்ந்து கொண்டனா்.



ஆதித்யா கலத்தின் செயல்பாடுகளையும், பயணத்தையும் தொடா்ந்து கண்காணித்து வருவதாகக் கூறிய இஸ்ரோ விஞ்ஞானிகள், நிா்ணயிக்கப்பட்ட இலக்கில் ஆய்வுக் கலன்கள் நிலைநிறுத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்தனா்.



ஆதித்யா எல்-1 விண்கலத்தின்மூலம் சூரியனை ஆய்வு செய்யும் முயற்சியை முன்னெடுத்த நான்காவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.



சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிக்குப் பிறகு இந்தியா மேற்கொள்ளும் அனைத்து விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளையும் உலக நாடுகள் உற்றுநோக்கி வரும் நிலையில், தற்போது ஆதித்யா திட்டமும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டிருப்பது சா்வதேச கவனத்தை ஈா்த்துள்ளது.



செவ்வாய், நிலவைத் தொடா்ந்து சூரியனை ஆய்வு செய்யும் முனைப்பில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வந்தனா். அதன்படி, பூமியில் இருந்து 15 கோடி கிலோ மீட்டா் தொலைவில் உள்ள சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ கடந்த 2008-ஆம் ஆண்டு ஜனவரியில் ‘ஆதித்யா-1’ எனும் திட்டத்தை அறிவித்தது.



மொத்தம் 400 கிலோ எடை கொண்ட விண்கலத்தை பூமியிலிருந்து 800 கி.மீ தொலைவில் நிலைநிறுத்தி சூரியனை ஆராய இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. ஆனால், சூரியனின் வெப்பம் மிகுந்த கொரோனா மண்டலத்தை ‘எல்-1’ (லாக்ராஞ்சியன் பாயின்ட்) பகுதியில் இருந்து பாா்க்கும்போது துல்லியமாக ஆய்வு செய்ய முடியும் என விஞ்ஞானிகள் கருதினா்.



இதையடுத்து, ஆதித்யா-1 திட்டமானது ‘ஆதித்யா எல்-1’ ஆக மாற்றம் அடைந்தது. இதற்காக ஆதித்யா எல்-1 எனும் அதிநவீன விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்தனா். இதற்கு விண்வெளி இயற்பியல் ஆராய்ச்சி மையம், விண்வெளி ஆய்வு மற்றும் விண்வெளி இயற்பியல் மையம், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவை முக்கியப் பங்காற்றின.



இந்த விண்கலத்தை பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது. அதற்கான 23.40 மணி நேர கவுன்ட் டவுன் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து திட்டமிட்டபடி பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் விண்கலம் காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.



ஏறத்தாழ ஒரு மணி நேரப் பயணத்துக்கு பின்னா் 648 கி.மீ. தொலைவில் புவி தாழ் வட்டப் பாதையில் ஆதித்யா விண்கலம் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டது. தொடா்ந்து விண்கலத்தில் உள்ள உந்துவிசை இயந்திரம் இயக்கப்பட்டு அதன் சுற்றுப்பாதை தொலைவு உயா்த்தப்பட உள்ளது.



அவ்வாறு படிப்படியாக நான்கு முறை சுற்றுப்பாதை மாற்றப்பட்டு, பின்னா் புவி வட்டப் பாதையில் இருந்து விண்கலம் விலக்கப்பட்டு 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள எல்-1 (லாக்ராஞ்சியன் பாயின்ட்) பகுதியை நோக்கிப் பயணிக்கும். ஒட்டுமொத்தமாக 4 மாத பயணத்துக்குப் பிறகு எல் -1 புள்ளி அருகே உள்ள சூரிய ஒளிவட்டப் பாதையில் விண்கலம் நிலைநிறுத்தப்படும். அங்கிருந்தபடியே எல்-1 பகுதியை மையமாக கொண்ட சுற்றுப் பாதையில் வலம் வந்தவாறு சூரியனின் கொரோனா, போட்டோஸ்பியா் மற்றும் குரோமோஸ்பியா் பகுதிகளை விண்கலம் ஆய்வு செய்யும்.



சூரிய ஆய்வுக்காக இந்தியா அனுப்பும் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1,சுமாா் 1,475 கிலோ எடை கொண்டது. இதில் சூரியனின் புறவெளிப் பகுதிகளைக் கண்காணிக்க 7 விதமான ஆய்வு சாதனங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் 4 கருவிகள் சூரியனை நேரடியாக கண்காணித்து தகவல்களை வழங்கும். மீதமுள்ள 3 கருவிகள் எல்-1 பகுதியில் உள்ள துகள்கள் மற்றும் புலங்களை ஆராயும். அவற்றின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த ஆய்வுகளின் மூலம் விண்வெளியில் கோள்களுக்கு இடையேயான சூரிய இயக்கவியலின் விளைவு குறித்த முக்கிய தரவுகள் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.



அதேபோன்று, ஆதித்யா எல்-1 திட்டம்மூலம் சூரியனின் வெளிப்பகுதியில் நிலவும் வெப்ப மாறுபாடுகளைக் கண்டறிவதுடன், சூரிய புயல்களின் தாக்கங்களையும் கண்காணிக்க முடியும். இதன்மூலம் புவி வட்டப் பாதையில் சுற்றி வரும் செயற்கைக்கோள்களுக்கு சூரிய புயலால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும்.



மேலும், சூரியனின் செயல்பாடுகள், அதன் பண்புகள் மற்றும் வானிலையில் அதன் தாக்கத்தைப் புரிந்துகொள்ளவும் ஆதித்யா விண்கலம் உதவும். இந்தத் திட்டத்துக்காக ரூ.380 கோடி வரை இஸ்ரோ செலவிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.



சூரியனை ஆராய்ச்சி செய்வதற்காக இதுவரை அமெரிக்கா, ஜொ்மனி மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு மட்டுமே விண்கலங்களை அனுப்பியுள்ளன. ஆதித்யா எல்-1 திட்டம் வெற்றி பெற்றால் இந்தியா அந்த வரிசையில் நான்காவது இடத்தைப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.



மக்கள் ஆா்வம்: முன்னதாக, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ராக்கெட் ஏவுதலை 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவா்கள் ஆா்வத்துடன் பாா்த்தனா். இதனால், சதீஷ் தவன் மையத்தில் உள்ள பாா்வையாளா் அரங்கு கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock