அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் ‘கட்' அடித்தால் பெற்றோருக்கு எஸ்எம்எஸ் - சாதகமா, பாதகமா?

naveen

Moderator



விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் விடுப்பு எடுத்தால், சம்பந்தப்பட்ட மாணவரின் பெற்றோருக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் நடைமுறை அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையில் 2015-ம் ஆண்டு முதல் ‘எமிஸ்’ (EMIS - Education Management Information System) என்ற இணையதளம் வாயிலாக பல்வேறு திட்டங்கள், இணைச் செயல்பாடுகள் மற்றும் செயல்முறைகளை அறிமுகப்படுத்தி, அவை பயன்பாட்டில் உள்ளன.



ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் அனைத்து தகவல்களும் இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் ‘பயோ மெட்ரிக்’ மற்றும் பதிவேடு மூலம் இருந்த ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவை ‘எமிஸ்’ இணையதளத்தில் பதிவு செய்யுமாறு 2021-22 கல்வியாண்டில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், ‘எமிஸ்’ இணையதளத்தில் இதரப் பணிகள் மற்றும் சர்வர் பிரச்சினை காரணமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையை பதிவிடுவதில் சிரமம் ஏற்பட்டது.



இதையடுத்து பிரத்யேகமாக ‘TNSED Attendance’ என்ற புதிய செயலி கடந்த 2022-23 கல்வியாண்டில் அக்டோபர் மாதம் சோதனை முறையில் சில பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டன. பின்னர், கடந்த 2023 ஜனவரி 1-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் இச்செயலி மூலம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகைப்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.



தற்போது இந்தச் செயலி அப்டேட் செய்யப்பட்டு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை காலை, மாலை என இருவேளையும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, பள்ளிக்கு வராத மாணவர்களின் விவரத்தை சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்களில் கேட்டபோது, “மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருப்பது சில நேரங்களில் பெற்றோருக்கு கூட தெரியாமல் இருக்கலாம்.



மாணவர்களின் நிலையை பெற்றோர் தெரிந்து கொள்ளும் வகையில் எஸ்எம்எஸ் அனுப்பும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டாலும், ஊரகப் பகுதிகளில் விழிப்புணர்வு அடையாத சில பெற்றோர் உள்ளனர். அவர்கள், இந்த எஸ்எம்எஸ் குறித்த தகவலை சம்பந்தப்பட்ட மாணவரிடமே கேட்டு தெரிந்து கொள்ளும் நிலைதான் தற்போது உள்ளது. இருப்பினும் இது நல்லதொரு முன்முயற்சியே.



சில குடும்பங்களில் படிப்பறிவு உடைய பெற்றோரைக் காட்டிலும், படிப்பறிவு இல்லாத அறியாமையுடன் கூடிய பெற்றோர். தங்கள் குழந்தைகளை அக்கறையோடு நல்வழிப்படுத்துவதை காண முடிகிறது. ஆனாலும் அவர்களை இந்த எஸ்எம்எஸ் முறை போய் சேரவில்லை என்றே நாங்கள் நடைமுறைப்படுத்தும் போது அறிய முடிந்தது.



படிப்பறிவு இல்லாத பெற்றோர் இருந்தால், அவர்களை வகுப்பு ஆசிரியர்கள் அவ்வப்போது பள்ளிக்கு வரச்செய்து, குறிப்பிட்ட மாணவனின் தரநிலை குறித்து நேரில் எடுத்துச் சொல்வது மிகச்சிறந்த முறை. அப்படி வரும் போது, அவர்களுக்கு செல்போன் எஸ்எம்எஸ் வழியான பள்ளிக்கு வந்தது குறித்த இந்தத் தகவலை பார்ப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் அல்லது கிராமங்களில் அவர்களது உறவுநிலை மற்றும் சுற்றத்தாரைக் கொண்டு இதை பார்க்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தலாம்.



இந்த மாதிரியான முயற்சிகள் இன்னும் பலனை அளிக்கும். ஆனாலும், ஒரு மாணவன் பள்ளிக்கு வராத தகவல் உடனுக்கு உடன் செல்பேசி வழியே அவனது பெற்றோருக்கு செல்வது நல்ல நடைமுறையே” என்று தெரிவிக்கின்றனர்
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock